ஜூன் 24ஆம்நாள், கவியரசர் கண்ணதாசன் பிறந்த நன்னாளாம். இந்த இனியநாளில் அவர்பற்றிய நினைவுகளையும்,
தமிழ்கூறும் நல்லுலகிற்கு அவரின் பெரும்பங்களிப்பினையும்
நாம் நினைவுகூர்வோம்.
கவியரசர்பற்றி கொஞ்சமாவது எழுதி
என் வாழ்வை பொருளுள்ளதாய் ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற
பேரவா என்னுள் இருந்துவந்தது.
அதை நிறைவேற்றிக்கொள்ளும்பொருட்டு
அவர்பற்றிய நினைவலைகளைகளையும்
நானறிந்துகொண்டனவற்றையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
அருட்கூர்ந்து நீவீரும்,
தாங்களறிந்தனவற்றையும் மற்றவர்களுக்கு சொல்லிடநினைத்தனவற்றையும்
இங்கே கொஞ்சமேனும் பகிர்ந்துகொண்டால் எல்லோரும் ஆனந்தங்கொள்ளலாம்.
கவியரசர் என்ற பாக்கடலில்
கரையை மட்டுமே கண்டவன் நான்.
அக்கடலில் நீந்தியவர்கள் தமது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கவியரசர்பற்றி ஒரே நாளில் பேசித்தீர்க்கவியலாதென்பதால்
நான்கைந்து தொடர்களாக பிரித்துப்பிரித்தெழுதலாமென்றிருக்கிறேன்.
மேலும் கவியரசரவர்கள்
இலக்கியம், அரசியல், ஊடகவியல், திரைத்துறையென்று பல்வேறு தளங்களில் தம்மை நிலைநாட்டிக்கொண்டிருந்தாலும்
திரைத்துறையின் உச்சாணிக்கொம்பானதும் காலச்சுவட்டில் எஞ்சிநிற்பனவுமான அவர்பாடல்களையொட்டியே
என் எழுத்தை தொடரப்போகிறேன்.
அவர்தம் பன்முமறிந்தவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
கவியரசர்பற்றி எழுதுவதற்கு
நிறையவே ஊக்கமளித்த நண்பர்கள் குமாரவர்களுக்கும் அருணவர்களுக்கும்
என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
****************************
"கவியரசர் கண்ணதாசன்"
பெயரை உச்சரிப்பதையே நற்றவமாய் கருதுகிறேன்.
எத்தனை பிரம்மாண்டம்..!
இப்படியெல்லாம் ஒருமனிதனால் மறைந்தும் வாழமுடியுமாவென
எல்லோரையும் வியக்கவைக்கிறவர்..!
இவரின் பிரம்மாண்டமான புகழ்போல
இவரின் தொடக்ககாலம் பிரம்மாண்டமாய் இருக்கவில்லை.
1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம்நாள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள
திருப்பத்தூர் தாலுக்காவிற்குட்பட்ட சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரில்
சாத்தப்பசெட்டியாருக்கும் விசாலாட்சியம்மையாருக்கும் எட்டாவது குழந்தையாகப்பிறந்தார்.
இவருடன்
கண்ணம்மை, ஞானாம்பாள், முத்தாத்தா, காந்திமதி, சொர்ணாம்பாள் என்று ஐந்து தமக்கைகளும்
கண்ணப்பன், ஸ்ரீனிவாசன் என்று இரு தமையன்களும்,
சிவகாமி என்ற தங்கையும் உடன்பிறந்தவர்கள்.
இவருக்கு பெற்றோரிட்ட பெயர் 'முத்தையா' என்பதாகும்.
ஒன்பது குழந்தைகளால் மக்கட்செல்வத்திற்கு குறைவின்றி இருந்தாலும்,
அவர்களை சீராட்டி வளர்க்க வீட்டில் பொருட்செல்வம் நிறைந்திருக்கவில்லை.
இந்நிலையில் சாத்தப்பசெட்டியாரின் பங்காளிகள் இருவருக்கு குழந்தப்பேறில்லை.
அவர்களுக்கு தன் குழந்தைகளை தத்துக்கொடுத்து
அதில்வரும் பணத்தைக்கொண்டு
குடும்பத்தை வழிநடத்தவேண்டியநிலைக்கு தள்ளப்பட்டனர் சாத்தப்பசெட்டியாரும் விசாலாட்சியம்மையாரும்.
பெண்குழந்தைகளை யாரும் தத்தெடுக்கமாட்டார்களென்பதால்,
முதலிரண்டு ஆண்குழந்தைகளையும் (கண்ணப்பன் மற்றும் ஸ்ரீனிவாசன்) தத்துக்கொடுக்க நினைத்தனர்.
ஆனால், ஸ்ரீனிவாசன் தாய்தந்தையரை பிரியமறுத்துவிட்டதால்
முத்தையா (கண்ணதாசன்) முந்திக்கொண்டு,
அண்ணனுக்கு பதிலாக என்னையே தத்துக்கொடுத்துவிடுங்களென்று கேட்டுக்கொள்கிறார்.
அதன்படி,
முத்துப்பட்டினத்தைச்சேர்ந்த
பழனியப்பசெட்டியார்-சிகப்பி குடும்பத்திற்கு
ஏழாயிரம் ரூபாய்க்கு தத்துக்கொடுக்கப்படுகிறார் முத்தையா என்கிற கண்ணதாசன்.
தத்துக்கொடுக்கப்பட்டபிறகு கண்ணதாசனுக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன்.
(தத்துக்கொடுக்கப்பட்ட மூத்தவர்
கண்ணப்பனின் மகன்தான் பஞ்சு அருணாச்சலம்.)
இப்படித்தான் கண்ணதாசனின் குழந்தப்பருவம் இருந்துள்ளது.
பின்னர், அமராவதிபுதூரிலுள்ள குருகுலம் உயர்நிலைப்பள்ளியில் படிக்கத்தொடங்கினார்.
இந்நிலையில் பழனியப்பசெட்டியாரின் குடும்பமும் வறுமைநிலைக்கு வந்துவிட,
தன் பள்ளிப்படிப்பை எட்டாம்வகுப்புடன் நிறுத்திவிட்டு புதுக்கோட்டையிலுள்ள திருமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
அப்போது அவருக்கு பதினேழுவயதுதான்.
திருமகள் அவரிடம் குடியில்லாவிட்டாலும்,
கலைமகள் அவரிடம் குடியிருந்தால்தான் அந்த வயதிலேயே திருமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
ஆம்.
எழுத்துலகில் தனியொரு முத்திரையை பதிக்கவேண்டுமென்ற ஆவல் அவரிடம் குடியிருந்தது.
சின்னவயதிலேயே அவ்வளவு அருமையாக கவிதைகள் கட்டுரைகள் என்று எழுதித்தள்ளுவாராம்.
கண்ணதாசனென்றால் கண்ணனின் தாசனில்லாயாம்.
முத்தையாவிற்கு கண்கள்பற்றிய கவிதைகளை எழுதுவதென்றால் அவ்வளவு ஆவலாம்.
கண்கள்மீதுகொண்ட காதலாலேயே கண்ணதாசன் என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டதாக
பின்னாளில் அவரே விளக்கியுள்ளார்.
இருந்தபோதிலும் அவரது பிற்கால படைப்புகளில் கண்ணனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரென்பதை நாமறிவோம்.
பள்ளிப்படிப்பு எட்டாம்வகுப்புதானென்றாலும்
தமிழிலக்கியங்களையும் இலக்கணநூல்களையும் படிப்பதில் ஆர்வங்கொண்டிருந்தார்.
பிற்காலத்தில் திரைப்படங்களுக்கு பாடல்களெழுதியபோது,
இந்த இலக்கியங்களை பயன்படுத்திக்கொண்டார்.
மறக்காமல் அதை வெளிப்படையாகவே சொல்லியும் மகிழ்ந்தார்.
இந்த ஒன்றுதான் அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தியது.
திருமகள் பத்திரிக்கையைத்தொடர்ந்து,
சென்னையிலிருந்த திரைஒளி பத்திரிக்கையிலும் (1945ல்) பிறகு 1947ல் சண்டமாருதம் பத்திரிக்கையிலும் பணிபுரிந்தார்.
சண்டமாருதத்தில் ஆசிரியராகப்பணியாற்றியபோதுதான்
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மந்திரிகுமாரி' படத்தில் கதை இலாக்காவில் பங்குபெற்றார்.
அப்போதுதான் அப்படத்தின் வசனகர்த்தாவான கருணாநிதியுடன் பழக்கமேற்பட்டது.
இப்பழக்கந்தான் இருவரையும் அரசியல்வரை நண்பர்களாக தொடரச்செய்தது.
ஆனால் காலத்தின் கோலத்தால் இருவரும் எதிரிகளாகிப்போயினர்.அது வேறுகதை என்பதால்
நாம் திரைத்துறைசார்ந்தே பயணிப்போம்.
பத்திரிக்கையாசிரியராக இருந்தால்,
தன் கனவான திரைப்படப்பாடலாசிரியராவரென்பது நிறைவேறாது என்று
நினைத்த அவர்,
அந்த வேலையை உதறிவிட்டு கோயம்புத்தூருக்கு சென்றார்.
அங்கு ஜூபிடர் நிறுவனம் தயாரித்த கன்னியின் காதலி என்ற படத்திற்கு பாடலெழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்கு கிடைத்தது.
ஜூபிடர் நிறுவனத்தின் மேலாளர் 'வெங்கடசாமி' என்பவர்தான் கண்ணதாசனுக்கு இவ்வாய்ப்பை வாங்கித்தந்தார்.
"கலங்காதிரு மனமே-உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.." என்ற பாடலை எழுதினார்.
இதுதான் அவரெழுதிய முதற்பாடலாகும்.
நடிகை மாதுரிதேவிக்காக T.V.ரத்னம் என்பவர் அப்பாடலை பாடினார்.
இதன்பிறகுதான் அவரின் கவியாட்சி பரவத்தொடங்கியது.
பின்னர், ரத்னதீபம் என்ற வங்காள மொழிப்படத்தை தமிழில் மொழிமாற்றஞ்செய்துவெளியிட இவர்தான் வசனமெழுதினார்.
இதுதான் இவர் முதலில் வசனமெழுதிய படமாகும்..
இப்படி கொஞ்சங்கொஞ்சமாக திரைத்துறையில்
தன்னை நிலைநிறுத்திக்கொண்ட கண்ணதாசன்,
ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக பாடல்களை எழுதத்தொடங்கினார்.
இடையே, தென்றல் என்னும் பத்திரிக்கையை தொடங்கி அதில் தன்னுடைய கட்டுரைகளையும் வெளியிட்டார்.
இப்படி சென்றுகொண்டிருந்தவேளையில்,
ஆங்கிலப்படமொன்றின் கதையை தமிழில் நேஷனல் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும்
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமும் முறையே 'அம்மையப்பன்' , 'சுகம் எங்கே' என்ற தலைப்புகளில் எடுத்தனர்.
அம்மையப்பன் படத்திற்கு கருணாநிதியும்,
சுகம் எங்கேவிற்கு கண்ணதாசனும் வசனமெழுதினர்.
இருபடங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின.
இரு படங்களிலும் வசனங்கள் ஒரே மாதிரி இருந்ததால்,
இருபடங்களுமே விமர்சனத்திற்குள்ளாகின.
இதையடுத்து கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் மனக்கசப்பேற்பட்டது.
இதுதான் பின்னாளில் பற்பல நிகழ்வுகளுக்கு வித்தாக அமைந்தது.
பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்த கண்ணதாசன்,
படத்தயாரிப்பாளராகவும் உயர்ந்தார்.
மாலையிட்ட மங்கைதான் இவர் தயாரித்த முதற்படமாகும்.
இது பெருவெற்றிபெற்றது.
ஆனால்,
இதையடுத்து வீரபாண்டியகட்டபொம்மனுக்கு போட்டியாக சிவங்கை என்ற படத்தை தயாரித்து,
வீரபாண்டியகட்டபொம்மன் வெளியான அதேநாளில் சிவகங்கையை வெளியிட்டார்.
படம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, சந்திரபாபுவை வைத்து கவலையில்லாத மனிதன் என்ற படத்தை எடுத்தார்.
ஆனால் இப்படத்தின் பெருந்தோல்வியே தன்னை கவலையான மனிதனாக்கியதாக எழுதியுள்ளார்.
அப்படத்தின் தோல்வி அவரை கடனாளியாக்கியது.
அதன்பிறகும் விடவில்லையே.
முருகேசன் என்பவருடன் கூட்டுசேர்ந்து வானம்பாடி படத்தை எடுத்தார்.
இதிலிருந்து கண்ணதாசனுக்கு வெற்றிமுகந்தான்.
அடுத்தாக, செழியனுடன் இணைந்து சுமைதாங்கி என்ற படத்தை எடுத்தார்.
முத்துமுத்தான பாடல்களால் சுமைதாங்கி வெற்றிபெற்றது.
இதன்பிறகு, இந்திய-சீனா போரை அடிப்படையாகக்கொண்டு
கண்ணதாசன் வசனமெழுதி பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இரத்தத்திலகம் என்ற படம் உருவானது.
இப்படத்தின் ஒரு காட்சியில் பழைய முத்தையாவாக (பள்ளிமாணவனாக) தோன்றி கண்ணதாசன் பாடியபாடல்தான்,
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.."
இப்பாடலில் தன் வாழ்க்கையை அப்படியே சொல்லிக்காட்டினார்.
தவறிழைக்காத மனிதனே இல்லை.
ஆனால் நம்மில் எத்தனை பேர் நாம் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்?
ஆனால், கண்ணதாசன் தன் சுயசரிதையில் தன்னைப்பற்றிய அனைத்து உண்மையையும் சொல்லியுள்ளார்.
மதுவிற்கும் மாதுவிற்கும் தான் அடிமையாக இருந்ததை பலநேரங்களில் அவரே வருத்தப்பட்டு தெரிவித்துள்ளார்.
தன் வாழ்க்கைக்காலத்தில் மூன்று திருமணங்களை செய்துகொண்டார்.
அவர்வாழ்க்கைமுறையை கிண்டலடிப்பவர்களுக்கு, அவர் சொன்னது ஒன்றேயொன்றுதான்.
"ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமென்று சொல்லக்கூடிய தகுதி எனக்குண்டு;
ஏனெனில் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தவன் நான்."
இந்த மனம் எத்தனை பேருக்கு வரும்?
இப்படியெல்லாம் அவர் வாழ்ந்திருந்தாலும்,
அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பது அவரின் காலத்தாலழியாத பாடல்களில்தான்.
கண்ணதாசனுக்குமுன் எத்தனையோ கவிஞர்கள் இருந்துள்ளனர்.
அவருக்குப்பிறகும் பலர் இருந்துள்ளனர் இருக்கின்றனர்.
இருந்தபோதிலும் கண்ணதாசனின் தனித்தன்மை என்ன?
அவரின் பாடல்களுக்கு என்னென்ன இலக்கியப்பாடல்கள் அடிப்படையாக இருந்தன..?
இதுவரையில் பொதுக்கட்டுரையாக இருந்த இத்தொகுப்பு,
இனி ஆராய்ச்சிக்கட்டுரையாக மாறப்போகிறது.
சில நாட்கள் பொறுத்திருங்கள்.
சுவைக்க நிறையவேயுள்ளன.
- ஃபீனிக்ஸ் பாலா

No comments:
Post a Comment