Monday, August 19, 2013

அனாதை இல்லங்கள்

அனாதை இல்லங்கள்
அதிகரிக்கும் நாட்டில்தான் 

 அரசமரப் பிள்ளையாரை
குழந்தைவரம் கேட்டு
சுற்றுகிறோம்.

மரங்களை வெட்டி
மறியல் செய்யும் நாம்தான்
மரக்கன்றை நட்டு
மழைவர காத்திருக்கிறோம்.

படித்தவனுக்கு வேலையற்ற
இந்த சமூகத்தில்தான்
நடிப்பவனுக்கு மன்றங்கள்வைத்து
பொழுதோட்டுகிறோம்.

பட்டினிச்சாவு நடக்கும்
இந்த தேசத்தில்தான்
வட்டிக்குவிட்டு
பணம் பெருக்குகிறோம்.

கற்புக்கரசிக்கு காவியம்வடித்த
இந்த மண்ணில்தாம்
கற்பழிப்பையும்
கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.

ஆயிரமாயிரம் பொறியாளர்கள்
குவிந்திருக்கும் இங்குதான்
கொசுமட்டையைக் கூட
அயல்நாட்டிலிருந்து
இறக்குமதி செய்கிறோம்.

அரசியல் அமைப்பை
வாக்களித்து தெரிவுசெய்யும்
நாம் தான்
சாக்கடையென்று அதை
விமர்சனம் செய்கிறோம்.

களமாடி செயலாற்ற
உறுதிகொள்ளவேண்டிய
நாம்தான்
கவிதை கட்டுரையால்
இணையம் நிறைக்கிறோம்.

எதிர்நோக்கும் சமூக மாற்றத்தை
தொடங்கவேண்டிய நாம்தான்
எவனோ ஒருவன்
அதைச்செய்ய வருவானென
ஏமாந்து நிற்கிறோம்.

- கவிதை நேசன்

No comments:

Post a Comment

Popular Posts