காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன்
இந்திய தமிழ் நாடும் கர்நாடக எல்லையுமான ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்தியில் ஓரமாக அமைந்த ஒரு கிராமம்தான் கோபிநந்தம். அந்தக் கிராமத்தில் வசித்த முனுசாமிக் கவுண்டர் மற்றும் புலித்தாயம்மா ஆகியோருக்கு 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி பிறக்கிறான் ஒரு மகன். அவன் தான் சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல்... என தன் ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்தே நாட்டை அதிரவைத்தவன்.சின்னஞ்சிறு ஆள்படை வைத்துக்கொண்டு வனதுறை அதிகாரியிலிருந்து நாட்டின் பல பிரபலங்கள் வரை கன கச்சிதமாகக் கடத்திக்கொண்டு போய் காட்டுக்குள் வைத்துக்கொண்டு இரண்டு அரசுகளையே மிரட்டி வனத்திற்குள் தனி ராஜாங்கம் நடத்தி வந்தவன்.இத்தனை நாச வேலைகளையும் அஞ்சாமல் செய்துவந்த அந்த மனிதனுக்குள் ஒரு ஓரத்தில் மொழிப் பற்றும் இருக்கத்தான் செய்தது. இரக்கமில்லாத அந்த மிருகத்துக்குள்ளும் மனைவி, குழந்தை என குடும்பப்பாசமும் அதிகமாகவே இருந்திருக்கின்றது.அவன் தான்... கூசிமுனுசாமி வீரப்பக்க கவுண்டர் என்ற இயற்பெயரைக் கொண்டு பின்னால் சந்தனக் கடத்தல் என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் வரவழைத்துக் கொண்ட சந்தனக் கடத்தல் வீரப்பன்.அந்த ஊர் மக்கள் அவனை மோலக்கண் என்றும் ஒரு சிலர் வீரப்பன் என்றும் அழைத்தனர்.ஆனால் நமக்கெல்லாம் அறிமுகமான பெயர் வீரப்பன்...அவன் பெயரிலேயே வீரம் இருந்ததாலோ என்னவோ தன் உயிரை இழக்கும் வரை அவனும் வீரனாகவே திகழ்ந்தான்.வீரப்பனின் வாழ்க்கை என்பது தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு இரத்த அத்தியாயமாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கும். காரணம் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வரை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பவனிவந்தவன் இவன். தமிழ்நாடு கர்நாடகம் என மிகப்பெரிய மாநில அரசுகளின் பொலிஸாருக்கு அவன் காலடித் தடம்கூட தெரியாமல் பார்த்துக்கொண்டவன். ஒன்றல்ல இரண்டல்ல வீரப்பனை பிடிக்க .பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனிக்காட்டு ராஜா நான்தான் என்பதை நிரூபித்து சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவன் சந்தனக் கடத்தல் விரப்பன்.வீரப்பன் பிறந்த கோபிந்தம் எனும் கிராமம் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசம். பள்ளிக்கூடம் என்ற ஒரு வார்த்தையைக் கேட்க கூட கொடுப்பனை இல்லாதவர்கள்தான் இந்த ஊர் மக்கள். அங்கு மழைக்குக் கூட சற்று ஒதுங்கிவிட்டுச் செல்ல ஒரு பள்ளிக்கூடம் இல்லாத ஊர் அது. ஏன் அதை அண்டிய கிராமங்களில் பள்ளிக்கூடம் இருக்குமே? என்றாலும் கூட அங்கேயும் இதே நிலைதான். இப்படியிருக்கும் கிராமத்தில் ஒருவன் எப்படி படிப்பறிவைக் கொண்டிருப்பான். அப்படியேதான் வீரப்பனும் படிப்பின் வாசனையே என்னென்று அறியாதவன் அவன்.வீரப்பன் சிறுவனாக இருந்தபோது அவன் செய்த வேலை மாடு மேய்ப்பது. அதை அவன் விரும்பிச் செய்தான். அந்நேரங்களில் வீரப்பனின் உச்சக்கட்ட மகிழ்ச்சியே மந்தையிலுள்ள மாடு ஒன்றின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு ஏனைய மாடுகளை மேய்ப்பதுதான்.இப்படி மாடு மேய்த்து மகிழ்ச்சியடைந்த விரப்பன் இறுதியில் மாபெரும் பயங்கரமான மனிதனாக மாறியது எப்படி?இப்படி மாடுகளை மேய்த்தும் சிறு சிறு குறும்புகளில் தன் பொழுதைக் கழித்துவந்த வீரப்பனுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார் ஒருவர். அவர் பெயர் சால்வை கவுண்டர். இவர் செய்துவந்த வேலை என்ன தெரியுமா?இவர் ஒரு காட்டு கடத்தல் காரர். இவரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக காட்டுப் பகுதியில் கடத்தல் தொழிலைச் செய்துவந்தார்.அவரிடம் வேலைக்குச் சேர்ந்தான் வீரப்பன்.மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் பின்னாளில் பயங்கரமான ஒருவனாக மாறுவதற்கு அடிகோலியது சால்வைக் கவுண்டருடன் வீரப்பன் கொண்டிருந்த சிநேகம்தான். மாடு ஒன்றின் மீது உட்கார்ந்துகொண்டு மாடுகளை மேய்ப்பதை விட கடத்தல் தொழில் நடத்துவது மிகவும் சிரமமானது என்பது விரப்பனுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.இருந்தும் கடத்தல் தொழிலை செய்ய விரும்புகிறான் என்றால் அதில் வரும் பணம் மாடு மேய்ப்பதால் வராது என்பதை உணர்ந்திருக்கிறான்.சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றிப் பேசும்போது நாம் சந்தனமரத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசத்தானே வேண்டும்...சந்தனமரம் பண்டைய இந்தியாவில் மிக்க மதிப்புடைய ஒரு பொருள். கர்னாடகா, கேரளா, தமிழகம் ஆகிய வனபகுதிகளில் மட்டுமே விளைவது இந்த சந்தன மரங்கள். திப்பு சுல்தான் காலத்தில் போர்களுக்கு நிதி வேண்டும் என்ற நோக்கில் சந்தனமர வளர்ப்பை தேசிய மயமாக்கினார். 1792இல் போடப்பட்ட இந்த சட்டம் அதன்பின்னர் வந்த கர்னாடகம், மெட்ராஸ் ராஜ்ஜியம் அரசுகளால் தொடர்ந்து பின்பற்றபட்டு இந்தியா சுதந்திரம் வாங்கி திப்புசுல்தான் ஆண்ட பகுதிகள் மூன்று மாநிலங்களாகி பிரிந்த பின்னரும் சட்டபுத்தகத்திலேயே இருந்து வந்தது.இந்த சட்டப்படி சந்தன மரம் முழுக்க அரசுக்கே சொந்தம். யார் வீட்டில் சந்தன மரம் வளர்த்தாலும் அதை வெட்டினால் அது அரசுக்கே சொந்தம். இதனால் சந்தனமரத்தை தனியார் யாரும் வளர்ப்பதில்லை.காட்டில் இயற்கையாக விளையும் சந்தனமரத்தை வெட்டினால் அரசு வன இலாகா அதிகாரிகள் பிடித்து தண்டிப்பார்கள். இப்படி விதிமுறைகள் இருந்ததால் வழக்கம் போல வன இலாகா அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சந்தனமரம் வாங்கி விற்பது அரசிடம் கோட்டா முறையில் சந்தன கட்டைகளை வாங்கி விற்பதை விட லாபகரமான தொழிலானது. இப்படிப்பட்ட பொருளாதார முறையில் உருவான கள்ள சந்தையின் விளைவே வீரப்பன்.அவன் செய்தது என்னவோ காட்டில் இயற்கையாக கிடைக்கும் மரத்தை வெட்டியது. அது சட்டப்படி குற்றம் என்றானதால் அவன் குற்றவாளி ஆனான். அதன்பின் கொலைகள், கொள்ளை,கடத்தல் என அவன் போக்கு மாறியது...சரி இப்போது சந்தனக்கடத்தல் வீரப்பன் கதைக்கு வருவோம்...சால்வைக் கவுண்டரோடு இணைந்து வீரப்பன் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தல் தொழில் செய்துவந்தான். அத்தோடு யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை திருடி விற்றுவந்தான். இந்த தொழிலில் நல்ல லாபம் வர தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு காட்டிற்குள் ஒரு ராஜாங்கத்தையே உருவாக்கிவிட்டான் வீரப்பன்.இப்படியாக பல சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்த வீரப்பனை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முயன்றபோது அவன் ஒவ்வொருவராக கொலைசெய்தான். இப்படித்தான் அவனுடைய கொலைப் படலம் ஆரம்பமாகியது.யானைத்தந்தம், சந்தன மரம் கடத்தல் தொழிலில் அதிகளவு பணம் சம்பாதித்து வந்த வீரப்பனின் அடுத்து முக்கியமான குற்றச் செயல்தான் ஆட்கடத்தல் மற்றும் மிரட்டல், பிணைத் தொகை இவை. இந்தத் தொழிலில் முக்கியமாகக் கடத்தப்பட்டவர்கள் பலரும் கல் குவாரி தொழிலதிபர்கள்.ஒருவரைக் கடத்தினான் என்றால் ஒரு கேசட் மட்டும் கடத்தப்பட்டவரின் உறவினருக்கு வரும் அந்தக கசட்டில் அவர் என்னென்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று அனைத்தும் இருக்கும். அதன் படி செய்துவிட்டால் கடத்தப்பட்டவர் சிறு கீறல்கூட இல்லாமல் திரும்பிவிடுவார்.வீரப்பன் சொன்னது படி நடந்துகொள்ளாவிட்டால் கடத்தப்பட்டவரின் சடலம் கூட உறவினருக்குக் கிடைக்காது.இப்படிப் பல கடத்தல்கள். இதில் முக்கியமான கடத்தல்தான் கன்னட சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் கன்னடத் திரைப்பட நடிகர் ராஜ்குமாரின் கடத்தல்.கிட்டத்தட்ட 72 வயதை எட்டியிருந்த ராஜ்குமார் தனது பண்ணை வீட்டில் இரவு நேர உணவை உண்டபின் சற்று இளைப்பாறிக்கொண்டிருந்த சமயம். கன்னடத் திரைப்படத் துறையின் முக்கியமான ஒரு தூண் என்றே சொல்லலாம் ராஜ்குமாரை. அவரோடு சேர்த்து இன்னும் பலரும் இருக்கிறார்கள். பண்ணை வீட்டில் அனைவரும் உறங்க இடம் போதாது என்பதனால் பண்ணை வீட்டிற்கு முன்பாக உள்ள புதிதாகக் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகையை நோக்கி செல்கின்றனர் சிலர்.அப்போது மணி சரியாக 9.30.ஐத் தொட்டிருக்கும். பங்களாவை நோக்கி நடந்த ராஜ்குமாரோடு இருந்த நாகராஜ் என்பவரின் சட்டையை இறுக்கமாக ஒரு கை வந்து பிடித்து இழுக்கிறது.தடித்த கரகரப்பான ஒரு குரலில் இப்படிச் சொல்கிறது... நான் வீரப்பன்!அடர்ந்த இருட்டு. அந்த இருட்டில் வீரப்பனின் மீசை தனியாகத் தெரிகின்றது. வீரப்பனோடு சேர்த்து கூட்டாளிகள் பத்துப் பேர்.வீரப்பன் மீண்டும் பேசுகிறான்... ராஜ்குமார் எங்கே?அவர் பழைய வீட்டில் இருக்கிறார்.தன்னோடு வந்த கூட்டாளிகளில் ஐந்து பேரைக் காவலுக்கு வைத்துவிட்டு மீதமுள்ள கூட்டாளிகளோடு பழைய வீட்டை நோக்கி செல்கிறான் வீரப்பன்.வெளியில் நடப்பவை எதையும் அறியாத ராஜ்குமார் வீட்டிற்குள் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.திடுதிடுவென உள்ளே நுழைந்த வீரப்பன், துப்பாக்கியை நீட்டி எங்கே ராஜ்குமார் என்று அதே உரத்தக் குரலில் கேட்கிறான். உடனே எழுந்துநின்றவர் நான்தான் ராஜ்குமார் என்கிறார்.உடனே வீரப்பன்...துப்பாக்கியை ராஜ்குமாரின் பக்கம் நீட்டி நான் வீரப்பன், நீங்கள் என்னோடு வர வேண்டும் என்று சொல்லுகிறான். உடனே ராஜ்குமாரின் மனைவி திடுதிப்பென்று எழுந்து உனக்கு என்ன வேண்டும் கேள் எவ்வளவு பணம் வேண்டும் சொல் தந்துவிடுகிறோம். அவரை விட்டு விடு என்று வீரப்பனைப் பார்த்துச் சொல்கிறார்.அப்படிச் சொல்லிக்கொண்டிருக்க வீரப்பனின் கூட்டாளி ஒருவன் ராஜ்குமாரின் கைகளைக் கட்டுகிறான்.வீரப்பன் அதே தடித்த குரலில் சொல்லுகிறான்... யாரும் சத்தம் போடக் கூடாது. நான் இப்போது அவரை அழைத்துச் செல்லப் போகிறேன். ஏன் எதற்கு என்று இப்போது சொல்ல முடியாது...சார் எனக்கு வேண்டும்... அவ்வளவுதான்.நான் அவருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். நீங்கள் அஞ்சத் தேவையில்லை அவர் பத்திரமாக என்னோடு இருப்பார் என்று சொன்ன வீரப்பன். தன் கையிலிருந்த ஒரு கசட்டை ராஜ்குமாரின் மனைவியிடம் கொடுத்து... இந்த கசட்டை கர்நாடக முதலமைச்சரிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்...வெளியே வந்த வீரப்பன் ராஜ்குமாரோடு இருந்தவர்களில் மூவரைப் பார்த்து நீங்கள் மூவரும் ராஜ்குமாருடன் வர வேண்டுமென வீரப்பன் சொல்கிறான். அவர்களையும் அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான்.நடந்துகொண்டு கொஞ்சம் சத்தமாகவும் திமிறரான குரல் நயத்துடனும் சொல்கிறான்...அம்மாவிடம் ஒரு கசட் கொடுத்திருக்கிறேன். அது உடனே கர்நாடக முதலமைச்சரிடம் போய் சேர வேண்டும். இப்படிச் சொல்லிக்கொண்டு நடந்து சென்ற வீரப்பன் இருட்டில் மறைந்துவிடுகிறான்.அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி. இருவரும் ஒன்று கூடி பேசிவிட்டு. ராஜ்குமாரை விடுவித்துக்கொள்ள தூது அனுப்ப முடிவெடுக்கிறார்கள். தூது போவது நக்கீரன் புலனாய்வு சஞ்சிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால்.அத்தோடு நெடுமாறனும் அனுப்பி வைக்கப்படுகிறார். கிட்டத்தட்ட 109 நாட்கள் வரை வீரப்பனிடம் பணயக் கைதியாக இருந்த ராஜ்குமார் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் விடுதலை செய்யப்படுகிறார்.இந்தக் கடத்தல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடையச் செய்தது.இப்படியாக வீரப்பனின் அட்டாகாசம் தாங்காமல் இரு மாநில பொலிஸ்களும் சேர்ந்து ஒரு பொலிஸ் குழுவை உருவாக்கி வீரப்பனை பிடிக்க ஒரு திட்டம் தீட்டுகின்றனர்.இந்தத் திட்டத்தில் விஜயகுமார் தலைமையேற்று நடத்திமுடிக்கிறார். பல நாட்கள் காத்திருந்து வியூகம் அமைத்து, சிங்கத்தைக் காட்டில் வேட்டையாடுவது கஷ்டம் அதனால் சிங்கத்தை நாட்டுக்கு வரவழைத்து பிடிக்க முயற்சி எடுக்கின்றனர். அதன்படி வீரப்பனும் கண்ணுக்கு சத்திர சிகிச்சை செய்துகொள்ள காட்டை விட்டு வெளியே வருகிறான்.இங்கேயும் ஒரு துரோகம் இழைக்கப்படுகின்றது. வீரப்பனோடு கூடவே இருந்த ஒருவன் வீரப்பனைக் காட்டிக்கொடுக்கின்றான். அதன்பிறகு இதேபோல் ஒரு தினத்தில் சரியாக 2004ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி ஒரு வண்டியில் வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் சென்றுக்கொண்டிருக்கையில் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிறான். காட்டுச் சிங்கத்தின் இரத்த வரலாறு இத்தோடு முடிவுறுகிறது.இந்தச் சம்பவத்தில் பல சந்தேகங்களும் உண்டு. அதில் முக்கியமானது வீரப்பனை சுட்டுக்கொன்றார்களா அல்லது கொன்றுவிட்டு சுட்டார்களா என்பது. காரணம் வீரப்பனை மோரில் விஷம் கலந்து அவனை குடிக்கவைத்துவிட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை.ரொபின்ஹுட்டா வீரப்பன்நிச்சயமாக எதிர்மறையாகத்தான் வீரப்பனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்களோ தங்களின் காவல் தெய்வமாகத்தான் வீரப்பனைப் பார்க்கிறார்கள்.செல்வந்தர்களிடமிருந்து பணத்தை களவாடி ஏழை எளியவர்களுக்கு வாரிவழங்கும் இன்றையக் கால ரொபின்ஹுட்தான் வீரப்பன் என்கிறார்கள் சத்தியமங்கலம் காட்டைச் சுற்றியுள்ள கிராமவாசிகள்.அதுமட்டுமல்ல கர்நாடக காவேரிப் பிரச்சினையைக் கூட ஒற்றை ஆளாக இருந்து சமாளித்திருப்பான் வீரப்பன், ஓக்கனேக்கல் நீர் பிரச்சினைக்கூட வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் வந்திருக்காது என்றும் கூடச் சொல்லப்படுகிறது.எது எப்படியோ... வீரப்பன் கொலையாளி என்று சட்டத்தில் சொன்னாலும் இல்லை அவன் ஒரு கொடையாளி என்றுதான் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.அது உண்மைபோலவும்தான் தெரிகிறது. இல்லை என்று போய் நின்றால் அள்ளி அள்ளிக்கொடுப்பானாம் வீரப்பன். அத்தோடு அவன் இறந்தபிறகு அவன் அளவு அதிகமாக செல்வங்களைச் சேர்த்துவைத்தாவன். இத்தனைக் கோடி பணம் மறைத்துவைத்தான் என்று எந்தச் செய்தியும் அவ்வளவாக இல்லாத அளவுக்கு ஏழைப்பங்காளனாகத்தான் இருந்திருக்கிறான்.ஆனாலும், வீரப்பனை நியாயப்படுத்த முடியாது. நிச்சயமாக குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் உதவி செய்திருக்கிறான் என்பதையும் மறுக்க முடியாது.நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும் அந்த பாற மனசுல நீர் இருக்கும்... ஆஹா வீரப்பன் பேர யார் சொன்னாலும் கருவில் இருக்கும் பிள்ளை கை எடுக்கும்...சந்தனக்கடத்தல், யானைத் தந்தம், ஆட்கடத்தல் என்று ஆரம்பித்து சத்தியமங்கலம் காட்டை தனது ராஜாங்கமாக்கி எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம்கொண்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் காட்டை ஆண்டு வந்த காட்டுச் சிங்கம் சாய்ந்து இன்றோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன.கட்டுக் கதை இல்லை... ஒட்டுக் கதை இல்லை... கண்டு கேட்டு வந்தோம் ஒரு வாறு... அந்த சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழ்ந்து செத்தவன் வரலாறு....இவனை எண்ணிக்கொண்டு நெஞ்சில் ஈரம் கொண்டு வாய்க்கால ஓடுது காவேரி நதி...--எஸ்.ஜே.பிரசாத்--Show commentsOpen link
No comments:
Post a Comment