Wednesday, August 7, 2013

சேரன் மகள் காதல் - தனிப்பட்ட குடும்ப விவகாரம்

பேஸ்புக்கில் இலவசமாக கிறுக்க முடிகிறது என்பதற்காக ஆல் இன் ஆல் அழகு ராஜா போல சமூகத்தில் நடக்கும் எல்லா சம்பவங்கள் குறித்தும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தவிர்ப்பது உண்டு. சேரன் மகள் காதல் விவகாரத்தையும் அப்படியே தவிர்த்தேன். ஏனெனில் சேரன் சாதி அல்லது வர்க்க வேறுபாட்டால் மகளின் காதலை எதிர்க்கவில்லை. தன் மகளை கரம் பிடிக்க விரும்புவனின் தகுதி, நடத்தை குறித்தான அச்சம் அது என்று அதை குறிப்பிட்டு இருந்தார். நம் சமூகத்தில் வாழும் பெரும்பாலான நமது தந்தைகள் அல்லது பெற்றோர்களின் நியாயமான கவலை இது என்பதால், அது அவர்களின் தனிப்பட்ட குடும்ப விவகாரம் என்றே எண்ணினேன்.


பெண் போராளிகள் விபச்சாரம் செய்து பிழைக்கிறார்கள் என்று வரையறை இன்றி, எதை வேண்டுமானாலும் புளுகி காசாக்கும் பத்திரிக்கைகளுக்கு வேண்டுமானால் அது செய்தியாகலாம், நமக்கு தேவையற்ற ஒன்று என்று இருந்தேன். ஆனால் வழக்கம் போல திராவிட முகமூடி அணிந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழின விரோதம் காட்டும் பொறுக்கிகள் இதிலும் தமிழையும், தமிழ் குடும்ப முறைகளையும், தமிழர் பண்பாட்டையும் இழுத்து அரிப்பை சொரிய துவங்கி இருப்பதால் எதிர்வினை ஆற்றுவது அவசியமாகிறது. (தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுக்கிகளாக இருந்து கொண்டு, தம்மை சந்துரு என்ற பொறுக்கியோடு பொருத்தி பார்த்து பதட்டத்தில் பொங்குபவர்களும் இதில் அடக்கம்). முதலில் சேரனின் பேட்டியை பாருங்கள் அல்லது வாசியுங்கள் http://www.youtube.com/watch?v=evHCNvxnLhE

//சந்துருவுடனான என் மகளின் காதலை முதலில் அங்கீகரித்தேன், ஒரு நண்பனாக அவனை அழைத்து பேசினேன், அவரது வீட்டாரையும் அழைத்து பேசினேன். மூன்றாண்டு காலம் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி, ஒரு பெண்ணை கைப்பிடிக்க தேவையான தகுதிகளை பெற்று, சாதித்து காட்டு, என்று சொன்னேன்; எல்லோரும் உடன் பட்டார்கள். ஆனால் அவனுடைய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை, பின்னர் என் மகள் மூலம் என் படத்தில் அவனை நாயகனாக்க தூது விட்டான். என் சின்ன பெண்ணுடன் காதலில் இருக்கும்போதே பெரிய மகளுக்கு 'ஐ லவ் யு' என்று செய்தி அனுப்புகிறான்.

என் மகளின் முகநூல் ஐடி மூலம் என் மகள் இவனை காதலிப்பதாக படங்களை பதிவேற்றும் இவன், ஒருபோதும் அவனுடைய முகநூல் கணக்கில் இவர்கள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன் கமிட்மென்டை காட்டி கொண்டதில்லை. அவனோடு அவள் சேர்ந்து வாழ்ந்த சில காலம், ஒரு சைக்கோவை போல நடத்தி இருக்கிறான். என் மகளே என்னிடம் இதையெல்லாம் கம்ப்ளைன்ட் செய்ததால்தான் நான் அதில் தீவிரமாக தலையிட வேண்டியதாயிற்று.

அவளை வேறு எந்த நண்பர்களோடும் பேசக்கூடாது என்று துன்புறுத்தி இருக்கிறான். அவளை என்னோடு பேசவைத்து ஸ்பீக்கர் ஆன் செய்து கேட்டு இருக்கிறான், அவள் அம்மாவோடு அவள் எப்போது பேசினாலும் ஸ்பீக்கரில் போட சொல்லி வற்புறுத்தி இருக்கிறான், காதலிப்பவளை பற்றியே பொதுவில் அசிங்கமாக பேசுகிறான். இவற்றோடு சேர்த்து குடும்ப பின்னணியும் சரியில்லை; அவருடைய அக்கா பலரிடம் இல்லற வாழ்வு என்ற ஆசைகாட்டி பணம் பறித்ததாக பத்திரிக்கை செய்திகள், நான் சினிமாத்துறையில் இருப்பதால் மற்றவர்கள் இவனை குறித்து என்னிடம் சொன்ன சேதிகள். குடிசை வீட்டில் வாழ்வை துவங்கி ஒரு சராசரி அப்பனாக இவ்வளவு தூரம் பயணித்திருக்கும் என் மனம் எப்படி இனியும் அவளை அவனோடு அனுப்பி வைக்கும்?//

இதுதான் சேரன் சொன்ன செய்தி. சேரனின் கூற்றுப்படி அவன் தவறானவனாக இருக்கும் பட்சத்தில், தனக்கான நல்ல துணை யார் என்று அறிந்து கொள்ளும் பக்குவமில்லாமல் தன் பெண்ணை 'ஒரு குடும்ப சூழலில்' வளர்த்தது சேரன் செய்த தவறு. வழக்கமாக, தன் படங்களில் வரும் காட்சிகளை போலவே மகளின் தலையில் 'பேன்' கடித்து விட்டதே என்று கண்ணீர் விட்டு, சென்டிமென்டான காட்சிகளுடன் வளர்த்து இருப்பார் போலும். பெண்கள் ஜனநாயகம் இல்லாத குடும்ப சூழலில், சுதந்திரம் அளிக்கப்படாமல் வளர்ந்து, பருவ வேகத்தில் அதை உடைத்தெரியும்போது, இந்த கோளாறுகள் நிகழ்ந்து விடுவது எதார்த்தம், ஏனெனில் அவர்கள் அதற்கு முன்பு அதற்காக தங்களை தயற்படுத்தி கொண்டு இருப்பதில்லை. ஆக வழக்கமான ஜனநாயகமற்ற ஆணாதிக்க + பெண்ணடிமை சூழலில் பிள்ளைகளை வளர்த்த சேரன்கள் முதற் குற்றவாளிகள் ஆகிறார்கள்.

(என் தந்தையும் இதைத்தான் செய்து இருப்பார், ஆனால் நானும் அதை மறைத்து பேஸ்புக்கில் நானும் உங்களை போலவே வேறு மாதிரி பேசி புரட்சி செய்து இருப்பேன் என்பதையும், நீங்கள் வெட்கப்பட்டு சொல்லாமல் விட்டதை, நான் இங்கே வெட்கம் இல்லாமல் சொல்லி கொள்ள விரும்புகிறேன்).

இந்த தவறான தேர்வுகள் குறித்தான புலம்பல்களை பெண்கள் ஓரளவு சுதந்திரத்துடனும், ஜனநாயகத்துடனும் வளரும் பிராமண குடும்பங்களில் என்றாவது கேள்விப்பட்டது உண்டா? அந்த நிலையில், மகளின் தேர்வை ஏற்றுக் கொண்டு சேரன் தன் முதிர்ச்சியை காட்டி இருக்கலாம். அதை விடுத்து காவல் துறை, பத்திரிக்கைகள், கண்ணீர், கம்பலை என்றெல்லாம் ஜவ்வாக இழுப்பது சேரனின் உளவியல் பலவீனத்தையே காட்டுகிறது. பாரதி கண்ணம்மா என்றொரு சாதி ஒழிப்பு புரட்சி படத்தை எடுத்த சேரனுக்கு இந்த சமூகத்தில் பரவி கிடக்கும் பெண்ணடிமைத்தனம் புரியாமல் போனதுதான் பரிதாபம். அதனால்தான் வாழ்வின் கால் பாதியை கடந்து விட்ட மகளிடம் உனக்கு தேர்வு செய்ய தெரியவில்லை என்று மல்லுக்கட்டி நிற்க வேண்டிய பரிதாபம் ஏற்ப்பட்டு இருக்கிறது. தன் வாழ்வில் தன் மகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் சேரன் தன் உள்ளங்கைகளில் ஏந்தி அவளை நகர்த்த வேண்டிய நிலை இருப்பின் சேரன் தன் மகளை ஊனமாக வளர்த்து இருக்கிறார் என்றே பொருள் கொள்ள நேரிடும்.

ஆனால் அதே வேளை, நம் தந்தைகளை போல சேரன் எளிதில் மகள்களுக்காக உணர்ச்சி வயப்படும் ஒரு சராசரி தந்தை, தான் காரில் சென்று இறங்கும் திரை விழாவிற்கு பைக்கில் வந்து இறங்கும் திராணியற்ற' மருமகன், மகளை பார்த்து ஊர் என்ன நினைக்கும் என்றெல்லாம் கூட அழுவாச்சி காவியங்கள் நிரம்பிய ஒரு திரை காட்சியை கற்பனை செய்து பார்த்து இருப்பார். சேரனின் சினிமாக்களே சேரனை நன்றாக பிரதிபலிக்கின்றன. குடும்பம், பாசம், பந்தம் என்பதையெல்லாம் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிமயமாக காட்டுபவர் சேரன். மொத்தத்தில் இதெல்லாம் தெற்காசிய குடும்பங்களை பிடித்து இருக்கும் பிணி அல்லது தெற்காசியாவின் சமூக சிக்கல். குடும்பங்களில் ஆணாதிக்க தன்மையும், ஜனநாயகம் இல்லாமலும் இயங்குவது.

இதே போன்றதொரு பெண்ணியம், குடும்ப முறைகள், பிள்ளைகள் வளர்ப்பு பற்றி எல்லாம் சில மேற்கத்திய நண்பர்களோடு ஒரு விருந்தில் இயல்பாக உரையாடிய போது ஒரு நண்பி சொன்ன விடயம் ஆச்சரியமாக இருந்தது. சைக்கிள் ஓட்டி பழகும்போது அவர்கள் சிறு வயதில் கீழே விழ நேரிட்டால், எப்படி கால்களை மடக்கி குட்டை பாவாடை பரந்து விடாமல் விழ வேண்டும், உட்காரும்போது எப்படி கால்களை நெருக்கி உட்கார வேண்டும் என்றெல்லாம் கூட அம்மாக்கள் கற்று கொடுப்பதாக ஃப்ரான்சிஸ்கா சொன்னது பெருத்த ஆச்சரியத்தை வரவைத்தது. ஆக நல்ல முறையில் பிள்ளைகள் வளர்ப்பு, பண்பாடு பற்றி போதிப்பதை எல்லாம் நம்மை விட நுட்பமாக வெள்ளைக்கார்கள் செய்து வருகிறார்கள். பிள்ளைகளுக்கு எது சரியானது என்று அவர்களே முடிவு செய்யும் பக்குவத்தை வளர்க்கிறார்கள். தனக்கான ஆண் நண்பனை தேர்வு செய்து வெளியேறும் நேரத்தில் அவள் ஒரு முழு யுவதியாகிறாள். அவள் பெற்றோர்களை நம்பியிராமல் தானே சம்பாதிக்க துவங்கி இருக்கிறாள்.

இதெல்லாம் சத்தியமாக நம் சமூகத்தில் இல்லை, அதைப்பற்றி எல்லாம் நம் புரட்சிகள் பேசுவதில்லை. இப்போது கூட எதார்த்தமான இந்த கருத்தியலில் நாம் சேரன் மீது, இந்த சமூகத்தின் மீது விமர்சனம் வைக்கவில்லை, கேள்வி எழுப்பவில்லை. நமக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும், அதில் மேண்டில் இருக்கா, மண்ணெண்ணெய் இருக்கா, அட குறைந்தபட்சம் இதையெல்லாம் வாங்க 'வக்கு' இருக்கா என்றெல்லாம் கவலை இல்லை. நாம் எழுப்பும் பிரச்சினை நான் விரும்புபவளை, நான் கஷ்டப்பட்டு என் சுயத்தை மறைத்து மடக்கியவளை, ஓட்டி செல்ல எனக்கு உரிமை இருக்கிறது. எனக்கு தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேட்க நீ யார்? காதலுக்கு கண்ணும் இல்லை, காதும் இல்லை, ஆணுறுப்பு மட்டுமே போதுமான தகுதியாக இருக்கிறது என்பதே நம் புரட்சி முன் வைக்கும் வாதம்.

ஆனால் காதல் மணம் முடித்த அன்றைய 'வெறும்' சேரன் தகுதிக்கு எட்டாத எம்ஜியார், சிவாஜி மகள்களை மணம் முடிக்க ஆசைப்பட்டு இருக்க வில்லை, ஒரு சாதாரண பள்ளி டீச்சரை கண் கலங்காமல் காப்பாற்றும் அளவுக்கான அரசாங்க வேலையில் தான் இருந்திருக்கிறார், தான் சினிமா எடுத்து பெரியவனாக வேண்டும் என்று மனைவியின் மூலம் சேரன் மாமனாருக்கு நெருக்குதல் கொடுத்து இருக்க வில்லை என்பதையெல்லாம் நம் புரட்சி கணக்கில் எடுத்து கொள்ள கூடாது, வேண்டியதில்லை, மாட்டோம், மாட்டவே மாட்டோம்!

அதேவேளை, சேரன்களின் நண்பர்கள் காட்டும் சினிமாக்கள் பொதுவாக இளைஞர்களிடம் காதலை பற்றிய என்ன மதிப்பீட்டை முன்வைக்கின்றன? அது நிச்சயமாக சேரன் சந்துருவிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கமான மதிப்பீடுகளை முன்வைக்கவில்லை, மாறாக பொறுக்கிகளையே கதாநாயர்களாகவும், அவர்களது ஒழுக்கமற்ற பொறுக்கித்தனமும், பல பெண்களை மடக்குவதே ஆண்பிள்ளைத்தனமும் என்ற மதிப்பீடுகளையே முன்வைக்கின்றன. சந்துரு செய்ததாக சொல்லும் அயோக்கியதனங்கள், கோலிவுட்டில் தனுஷ், சிம்பு போன்ற கதாநாயகர்கள் பல படங்களில் செய்து காட்டி, விசிலுடன் கூடிய வரவேற்பை பெற்ற காட்சிகளின் அச்சு அசல் நகல்.

ஆனால் சேரனுக்கு நிகழ்ந்ததை மகிழ்வுடன் பார்க்கிறேன். இது போன்று இன்னும் ஒன்றிரண்டு இயக்குனர்களுக்கு நிகழ்ந்தால் 'இந்த உலகமே காதலால்தான் இயங்குகிறது, எங்கும் காதல், எதிலும் காதல், எல்லாம் காதல், பட்டாம் பூச்சியில் காதல், பருத்தி கொட்டையில் காதல் என்றெல்லாம் மாயைகளை இனி திரையில் திணித்து இளைஞர்களை காதல் போதையில் தள்ள மாட்டார்கள். காதலை விட இந்த சமூகத்தில் பேச எண்ணற்ற பிரச்சினைகளும், முரண்களும் இருக்கின்றன என்பதை உணர துவங்குவார்கள். காதல் என்பது பசி, தூக்கம், தாகம் போன்றதொரு வெறும் உணர்வு, அதில் புனிதம் புண்ணாக்கெல்லாம் கலந்துவிட்டது நம் சமூகமும், இந்த சினிமாவும் என்பதை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட இயக்குனர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

(குறிப்பு: சேரன் என்ற மரியாதைக்குரிய இயக்குனரின் தனிப்பட்ட குடும்ப விவகாரம் பொதுவில் கிழித்து தொங்கவிடப்படும் கேலிப்பொருளாக மாறியதை எண்ணி வருந்துகிறேன், ஆனால் அதுவே இன்றைய ஊடக/ சமூக வலைத்தளங்களின் தர்மமாக மாறிப்போய் இருக்கிறது. சேரன் குடும்பத்து கேசை இங்கே பேஸ்புக் நீதிபதிகளே வலிய வந்து suo motu கேசாக்கி தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். தீர்ப்பு சொன்ன இந்த ஜட்ஜ்களின் குடும்ப, பிள்ளை, பொண்டாட்டி, அக்கா கேஸ்களும் வேறு ஒரு நாள் இங்கே தீர்ப்புக்கு வரும், அன்று அவர்களுக்கும் இதே பாணியில் தீர்ப்பு வழங்கப்படும் என்பதே சேரனுக்கு நான் வழங்கும் ஆறுதல்)

No comments:

Post a Comment

Popular Posts