Friday, June 21, 2013

மணிவண்ணன் - தமிழன் - Manivannan

கோவையில் பெரிய அரிசி வியாபாரியும் அரசியல்வாதியுமான டிஎஸ் மணியத்தின் மகனாகப் பிறந்த மணிவண்ணன், கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே அவர் பார்த்த படம் கிழக்கே போகும் ரயில். அந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு 16 பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதினாராம் மணிவண்ணன். அதைப் படித்துவிட்டுத்தான், மணிவண்ணனை தன்னுடன் சேர்த்துக் கொண்டாராம் பாரதிராஜா.


பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் சொன்ன முதல் கதையே பிடித்துப் போய்விட்டது. இதையே படமாக்கலாம் என முடிவெடுத்து அதற்கு நிழல்கள் என்று பெயரிட்டனர். இளையராஜா இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் எழுதினார் மணிவண்ணன். வாலி வருவதற்கு தாமதமானதால், மணிவண்ணனையே எழுத வைத்தாராம் ராஜா. அதுதான் 'மடை திறந்து...' பாடல். இந்தப் பாடலை எழுதி முடித்த பிறகு வாலி வந்திருக்கிறார். அதற்குள் பாதிப் பாடலை மணிவண்ணன் எழுதிவிட்டாராம். ஆனாலும் வாலி பெயரிலேயே அந்தப் பாடல் வரட்டும் என்று கூறியிருக்கிறார்.

கதை - வசனம் எழுதிய முதல் படமே தோல்வி. ஆனால் பாரதிராஜா, இதே மணிவண்ணனை வைத்து ஒரு வெற்றிப் படம் தருவேன் என்று நண்பர்களிடம் சவால்விட, அந்த சவாலில் ஜெயிக்க மணிவண்ணன் உருவாக்கிய கதைதான் அலைகள் ஓய்வதில்லை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும். காதல் ஓவியம் படத்துக்கும் மணிவண்ணன்தான் கதை வசனம். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார்.
மணிவண்ணன் இயக்கிய முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநராக அவரை சிபாரிசு செய்தவர் இளையராஜா. கதை ரொம்பவே வித்தியாசமானது. இந்த முதல் படத்திலேயே தான் மக்களுக்காக கலைஞன் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பார் மணிவண்ணன்.

மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப பட்ஜெட்டில், மிகக் குறைந்த நாட்களில்... ஜஸ்ட் 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவர் நம்பவே முடியவில்லையாம். 'என்னய்யா சொல்ற.. 12 நாளில் ஒரு படமா... சரி படத்தைக் காட்டு' என்றாராம். படத்தைப் பார்த்ததும், "பிரமாதம்... அசத்தியிருக்கேய்யா... இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே..." என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். 'இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா, அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும்...' என்றாராம் இளையராஜா. அந்தப் பின்னணி இசையை இசைத் தட்டிலும், கேசட்டுகளிலும் தனியாக பதிவு செய்து கொடுத்ததெல்லாம் தனிக் கதை.

இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். பாலைவன ரோஜாக்களுக்கு கலைஞர்தான் கதை வசனம். வண்ணப் பட காலகட்டத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி மிக அழகாகவும் சிறப்பாகவும் வந்த படங்களில் என்றும் முதலிடம் இந்த பாலைவன ரோஜாவுக்குதான். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு யாராலாவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் க்ளாஸ்-ஆக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை.

மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார். ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான். மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும்.

அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்த மணிவண்ணன், அடுத்து நூறாவது நாளின் இரண்டாம் பாகம், மற்றும் சத்யராஜுன் இணைந்து பணம் படுத்தும் பாடு ஆகிய படங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தார். அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். காரணம் அமைதிப்படை 2 கொடுத்த லாபம் அப்படி. அமைதிப்படை 2 ன் தொலைக்காட்சி உரிமையே ரூ 3.5 கோடிக்கு போனதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்தார். ரஜினியுடன் தொடர்ந்து பெரிய படங்கள் பலவற்றிலும் நடித்தார். கடைசியாக சிவாஜியில் ரஜினியின் தந்தையாக நடித்தார். சினிமாவைத் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். மணிவண்ணன் மகள் திருமணத்தையே ரஜினிதான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

மணிவண்ணனுக்கு நிகராக ஒரு திரைக்கலைஞர்... வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர் மணி. அவரிடமிருந்து உருவான விக்ரமன், சுந்தர் சி, சீமான், பிரபு சாலமன், ராசு மதுரவன் என அத்தனை இயக்குநர்களும் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்றால் ஒரு முறையாவது மணிவண்ணனுடன் பணியாற்ற வேண்டும் என்பார் இயக்குநர் விக்ரமன். இனி இப்படியொரு மகத்தான மக்கள் கலைஞனுக்கு எங்கே போவது!!

No comments:

Post a Comment

Popular Posts