சேரன் நடத்தும் திரைப்படப் போட்டி புதிய முயற்சி
நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் ஓர் புதிய முயற்சியாக சேரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படப் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
வழக்கமாக, ஒரு திரைப்படம் வெளியான பின்னர் அந்த படத்தின் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகளின் நடனங்களை மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் நடன இயக்குனர் வடிவமைத்தபடியே மேடைகளில் அரங்கேற்றி வருகின்றனர்.
முதன் முறையாக, திரைப்படம் வெளியாவதற்கு முன்னமே அத்திரைப்படத்தின் காட்சிகள் குறித்த தங்கள் திறமையையும் கற்பனையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இயக்குநர் சேரன் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அழைப்பிதழ் வித்தியாசமான சிறந்த முயற்சி என்று பாராட்டப்பட்டது. படத்தின் விளம்பர யுக்திகளில் புதுமை செய்யும் முயற்சியாக, தமிழில் முதன் முறையாக மூன்று லட்சம் ஆடியோ சிடிக்கள் ஒரு முன்னணி வார இதழுடன் இணைந்து தமிழகமெங்கும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இப்போது அடுத்த கட்டமாக இந்த கல்லூரி மாணவர்களுக்கான போட்டியை சேரன் துவக்கியிருக்கிறார். 'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி தனது பத்தாவது இயக்கத்தில் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை இயக்கித் தயாரித்துள்ள சேரன், வரும் நவம்பர் 22ம் தேதி உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.
நல்ல கதைகளுடன் முற்போக்கு கருத்துகளுடன் வழக்கமாக திரைப்படங்களை இயக்கி வரும் சேரன், 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்திலும் இளைஞர்களை, மாணவர்களை, எதிர்காலத் தலைமுறையை மையமாகக் கொண்ட கதைக்கருவைக் கையில் எடுத்திருக்கிறார்.
அதை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இப்போது 'சேரனின் ஜேகே ஃபெஸ்ட் 2013′ என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். இதன்படி, அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான மேடைத் திறன் போட்டி மற்றும் காட்சிப் போட்டி என்று இரண்டு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேடைத் திறன் போட்டியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். ஒரு கல்லூரியில் அதிகபட்சம் நான்கு அணிகள் பங்கேற்கலாம். ஒரு அணியில் குறைந்த பட்சம் இருவரும் அதிக பட்சம் பத்து பேரும் இடம் பெற்றிருக்கலாம். 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் ஏதேனும் ஒரு பாட்டுக்கு மாணவர்கள் தங்கள் கற்பனைத் திறமைப் பயன்படுத்தி, நடனம், நாடகம் அல்லது வேறு பிற வகைகளில் அவர்கள் மேடையில் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
இதற்காக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பெருநகரங்களில் போட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கேற்பவர்களில் சிறந்த பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக இருபத்தைந்தாயிரம் ரூபாயும், மற்ற ஒன்பது குழுக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட இருக்கிறது.
காட்சித் திறன் போட்டியில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் விஷுவல் கம்யூனிகேசன், மாஸ் கம்யூனிகேசன், மற்றும் எலக்ட்ரானிக் மீடியோ ஆகிய இவற்றின் சார்புத் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியும்.
'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் எதேனும் ஒரு பாடல் காட்சிக்கு தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து, இயக்கி நடிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விதமான இந்த படைப்பை சிறப்பாகப் பதிவு செய்யும் அணிகளில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக எழுபத்தைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் பதிவு செய்த காட்சிகள் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தோடு இணைக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. படத்துவக்கம், இடைவேளை மற்றும் இறுதியில் இவை இடம் பெறும். இவற்றோடு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரமும், கல்லூரி விபரமும் இடம் பெற்றிருக்கும்.
இப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே, தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளில் இருந்து 82 அணிகள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. மாணவர்களிடையே இப்போட்டிகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பின் காரனமாக போட்டியில் பங்கேற்பதற்கான இருதி நாளாக நவம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் இருபது அணிகளின் படைப்புகள் தந்தி டிவி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், cheransjktalenthunt@dreamtheatres.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் இளைஞர்களையும், மாணவர்களையும், புதிய தலைமுறையினரையும் அழைத்து வரும் விதமாக இந்தப் போட்டிகள் அமைந்துள்ளன. இதன் மூலம் புதிய பரிமாணங்களில் திரைப்படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக நம்பலாம்.
shared via